திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சி சுகாதாரப் பிரிவில் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கும், டெங்கு தடுப்புப் பணியாளர்களுக்கும், அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு நேற்று (ஜூன்.27) வழங்கினார்.
முன்களப்பணியாளர்களின் பணி பாராட்டுக்குரியது
தொடர்ந்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, 'தமிழ்நாட்டின் நிதி நிலை மோசமான நிலையில் உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதி நிலை அறிக்கைத் தாக்கல் செய்வதற்கு முன்பு வெள்ளை அறிக்கை வெளியிடவுள்ளார்.
திருவண்ணாலை நகராட்சி தூய்மை மற்றும் டெங்கு தடுப்பு முன்களப் பணியாளர்களின் பணி மிகவும் பாராட்டுதலுக்கு உரியது.
பல்வேறு அமைப்புகள் தாமாக முன்வந்து கரோனா தொற்று நிவாரண நிதி அளித்து வருகிறது. திருவண்ணாமலையில் உள்ள வணிகர்களும், கரோனா நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்குகிறார்கள்.
கரோனா நிவாரணம்
திருவண்ணாமலை நகராட்சி அலுவலக பொது சுகாதாரப்பிரிவில் பணிபுரியும் 330 தூய்மைப் பணியாளர்கள், 120 டெங்கு தடுப்புப் பணியாளர்கள் முறையே மொத்தம் 450 பணியாளர்களுக்கு, திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
ஒரு நபருக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள தொகுப்பு அளிக்கப்பட்டது.
கரோனா மூன்றாம் அலை
உலக சுகாதார அமைப்பு கரோனா மூன்றாவது அலை வரும் எனத் தெரிவித்துள்ளது. அதைச் சமாளிக்க தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து மருத்துவமனைகளிலும் முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை'என்றார்.
அனைத்து வியாபாரிகள் சங்கம் நிதியுதவி
கரோனா நிவாரணப் பணிகளுக்கு தங்கள் பங்களிப்பை அளிக்கும் விதமாக, திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இரண்டாம் தவணையாக ரூபாய் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
அதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பெற்றுக்கொண்டார். முன்னதாக, முதல் தவணையாக ரூபாய் 12 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 23 மாவட்டங்களில் துணி, நகை கடைகளை திறக்க அனுமதி