காவிரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டில் 85 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 10 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா திருவண்ணாமலையில் உள்ள ஈஷா நாற்றுப் பண்ணையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளாமானோர் கலந்துகொண்டனர். அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நாற்றுப் பண்ணையில் விதைகளைத் தூவி மரக்கன்று உற்பத்தியைத் தொடங்கிவைத்தார்.
அதிக மரக்கன்றுகளை உற்பத்தி செய்து மரம் சார்ந்த விவசாயத்தில் தமிழ்நாடு விவசாயிகளை ஈடுபடுத்தி, அவர்களுக்குப் பொருளாதார மேம்பாடு அடையச் செய்ய இத்திட்டம் வழிவகை செய்யும் என்று கூறப்படுகிறது. மேலும் பல்வேறு வகை மரங்கள், பாரம்பரிய மூலிகைச் செடிகளின் கண்காட்சியும் இந்த நிகழ்ச்சியில் நடைபெற்றது. தூய சவேரியார் கல்லூரியில் முதுநிலை ஆராய்ச்சியாளர் பாண்டிகுமார் அவர்கள் மூலிகைகளின் பயன்கள் குறித்துப் பேசினார்.