திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சிகளில் அரியாகுஞ்சூர் ஊராட்சியும் ஒன்று. அரியாகுஞ்சூர், சின்னகல்தாம்பாடி ஆகிய கிராமங்களை இந்த ஊராட்சி உள்ளடக்கியுள்ளது. சுமார் 700க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்டுள்ள இந்த ஊராட்சியில், பட்டியலின மக்களும், பழங்குடியினத்தைச் சேர்ந்த இருளர் மக்களும் அதிகமாக வசித்து வருகின்றனர். நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியின மக்களுக்காக அரியாகுஞ்சூர் ஊராட்சி ஒதுக்கப்பட்டதால் சின்னகல்தாம்பாடியிலுள்ள இருளர் இனத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர், ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு சுமார் 500 வாக்குகள் பெற்று ஊராட்சிமன்றத் தலைவரானார்.
ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் பெரும்பாலானோர் சொந்த வீடு, சொகுசு வாகனம் என ஆடம்பர வாழ்க்கை வாழும் இந்தக் காலகட்டத்தில், சிறிய காங்கிரிட் வீட்டில் மின் இணைப்பு கூட இல்லாமல் ஆறு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார் முருகேசன். தினந்தோறும் விறகு வெட்டி, அதனை விற்பனை செய்து தனது குடும்பத்தை நடத்திவரும் முருகேசன், மிதிவண்டி கூட இல்லாமல், நடந்தே ஊராட்சி மன்ற பணிகள் அனைத்தையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் ஒருவர் இறந்துள்ளார். ஊர்த் தலைவர் என்ற முறையில் முருகேசன் மாலை எடுத்து மரியாதை செலுத்த துக்க வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்த ஊரைச் சேர்ந்த சிவானந்தம், செல்வம் ஆகிய இருவரும் முருகேசன் வைத்திருந்த மாலையைப் பிடுங்கி கீழே எறிந்து, அவரின் வறுமையைக் காரணம் காட்டி சவக்குழி தோண்ட வற்புறுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், மன உளைச்சலுக்குள்ளான முருகேசன், "எனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு ஏதாவது செய்ய நினைத்தால், அதனை துணைத் தலைவர் சிவானந்தன், வார்டு உறுப்பினர் செல்வம், ஊராட்சி செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் தடுத்து விடுகின்றனர். நான் இருளர் இனத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே, இவர்கள் மூவரும் கூட்டாகச் சேர்ந்து ஆதிக்க மனப்பான்மையில், என்னைக் கொத்தடிமை போல் நடத்துகின்றனர். இதுவரை நான் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கோ, செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கோ சென்றதில்லை.
இங்கு நடக்கும் தவறுகளையும், சட்டவிரோத செயல்களையும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம், எனது மகள் மூலம் புகார் மனுவாக எழுதிக் கொடுக்க பலமுறை முயற்சி செய்தும், அதனை அவரிடம் கொடுக்க முடியவில்லை" என வேதனையுடன் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அரியாகுஞ்சூருக்கு வந்து, தன்னை சவக்குழி வெட்ட வைத்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்பதே ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசனின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கரோனா காலத்திலும் சாதி வெறியர்களின் காட்டம் ஓய்ந்தபாடில்லை என்று காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும் இதுபோன்ற சாதி வெறியர்களை உடனே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படியுங்க: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கவலைக்கிடம்- மருத்துவமனை பரபரப்பு அறிக்கை!