திருவண்ணாமலை: போளூர் வட்டத்திற்கு உட்பட்ட சேத்பட் அண்ணா தெருவைச் சேர்ந்தவர், மணிகண்டன். இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சுகன்யா என்பவருக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் மகன் ஒருவர் உள்ளார். மேலும், மணிகண்டனுக்கு உடன் பிறந்த நான்கு சகோதரிகள் உள்ளனர்.
இவர்களுக்குச் சொந்தமான 62 சென்ட் வீட்டுடன் சேர்ந்த காலி மனையும் உள்ளது. இதில் 15 சென்ட் இடத்தை மணிகண்டன் உறவினர் ஒருவர் வாங்கி உள்ளார். இதனையடுத்து அவரிடம் இருந்து சேத்துப்பட்டைச் சேர்ந்த கருணாகர செட்டியார் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி உள்ளார்.
பின்னர், இவ்வாறு வாங்கப்பட்ட இடத்தில் திருமண மண்டபம் கட்டும்போது மணிகண்டனுக்குச் சொந்தமான இரண்டு சென்ட் இடத்தையும் சேர்த்து காம்பவுன்ட் சுவர் அமைத்துள்ளதாகத் தெரிகிறது. இதனை பலமுறை தட்டிக் கேட்ட மணிகண்டனுக்கு, கருணாகர செட்டியார் தரப்பில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் முருகன் மற்றும் அதிமுக பிரமுகர் ராமச்சந்திரன் ஆகியோர் கருணாகரனுக்கு ஆதரவாக இணைந்து மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், தனக்கு சொந்தமான இடத்தில் உள்ள கிணறு மற்றும் வீட்டுமனையை காணவில்லை எனவும், அதனை கண்டுபிடித்து அளந்து தர வேண்டி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மணிகண்டன் புகார் அளித்து வந்துள்ளார். ஆனால், அதிகாரிகள் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும், இது தொடர்பாக ஆரணி கோட்டாட்சியர், போளூர் தாசில்தார், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தும் எத்தகைய நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், திருவண்ணாமலை நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் அடிப்படையில், அந்த இடத்தை அளந்து மணிகண்டனுக்கு தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும், தனது நிலம் தொடர்பாக சேத்பட்டு தாலுகா அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் உண்ணாவிரதம், உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் காத்திருப்புப் போராட்டம் என பல வகையான போராட்டங்களில் இந்த இரண்டு ஆண்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே, வருவாய்த்துறை அதிகாரிகள் அவருக்குச் சொந்தமான இடத்தை பல முறை அளந்து காட்டியும் அதனை மணிகண்டன் ஏற்கவில்லை.
இதனையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி சேத்பட் தாலுகா அலுவலகத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர், தனது நிலம் தொடர்பான விஷயத்தில் தாசில்தார் கோவிந்தராஜ், சர்வேயர் சந்தியா, விஏஓ சதீஷ் ஆகியோரை சந்தித்து தனது நிலத்தை அளக்க வருமாறு கூறியும், அவர்கள் அனைவரும் கருணாகரனுக்குச் சாதகமாக செயலாற்றி வந்ததாக மணிகண்டன் பலமுறை குற்றம்சாட்டி உள்ளார்.
![தற்கொலையைத் தவிர்த்திடுக](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-07-2023/18888498_thiruvannamalai.jpg)
இந்த நிலையில், நேற்று மாலை தனது வீட்டில் வைத்து மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த மணிகண்டனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து சேத்பட் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி மணிகண்டனின் மனைவி சுகன்யா மற்றும் அவரது மாமனார் மற்றும் உறவினர்கள் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் நேரில் மனு அளித்துள்ளனர்.
மேலும், தான் தற்கொலை செய்வதற்கு முன்னதாக மணிகண்டன் வீடியோ ஒன்றையும் பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சென்னை தனியார் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவன் மரணம்.. முதலுதவி பெட்டி கூட இல்லை என பெற்றோர் வேதனை!