திருவண்ணாமலை: செங்கம் தொகுதிக்கு உட்பட்ட தானிப்பாடி அடுத்த மல்காபூர் பகுதியைச் சேர்ந்தவர், தேன்மொழி. இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாலத்தீவில் வீட்டு வேலைக்காக சென்றிருந்தார். கடந்த 4 ஆண்டு காலமாக மாலத்தீவுப் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதில் தேன்மொழி இறந்துவிட்டார்.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் உதவியோடு கடந்த 8 நாள்களுக்கு முன்பு பலியான தேன்மொழியை குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று தனி விமானம் மூலம் மாலத்தீவில் இருந்து பெங்களூருக்கு நேற்று இரவு 10 மணிக்கு தேன்மொழியின் உடல் கொண்டு வரப்பட்டு, பெங்களூரு விமான நிலையத்திலிருந்து செங்கம் தொகுதிக்கு உட்பட்ட மலையனூர் செக்கிடி ஊராட்சி, மல்காப்பூர் கிராமத்திற்கு அதிகாலை 5 மணிக்கு அவருடைய உடல் வந்தடைந்தது.
தமிழ்நாடு அரசு சார்பில், இன்று வெளிநாடு தமிழர்களுடைய அமைச்சர் செஞ்சி மஸ்தான் தேன்மொழி உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரது இறுதிச் சடங்கிற்காக குடும்பத்தினருக்கு சொந்த நிதி வழங்கினார். மேலும், செங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் மு.பெ.கிரி, உயிரிழந்த தேன்மொழியின் குடும்பத்திற்கு இறுதிச்சடங்கு செய்வதற்காகவும், நிதி உதவி வழங்கினார்.
இவர்களுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆகியோர் பொதுமக்கள் முன்னிலையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாலத்தீவில் நிகழ்ந்த சிலிண்டர் வெடித்து தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். அதில், கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜெனில் மற்றும் சுந்தரி, காரைக்குடியைச் சேர்ந்த கணேசன், திருவண்ணாமலையைச் சேர்ந்த தேன்மொழி ஆகியோர் அடங்குவர்.
இதுகுறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த மல்காப்பூர் பகுதியைச்சேர்ந்த தேன்மொழி என்பவர், தனது வாழ்வாதாரத்துக்காக வெளிநாட்டுக்குச்சென்று வேலை செய்து வந்தார். சிலிண்டர் வெடித்த தீ விபத்தில் உயிரிழந்த தகவல் கிடைத்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் முயற்சியால் கடந்த 8 நாள்களுக்கு முன்பு, தேன்மொழியின் உடல் அவர்களின் உறவினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.
மேலும், உயிரிழந்த தேன்மொழிக்கு அரசு சார்பில் நிதி உதவி மற்றும் அவரது குடும்பத்திற்கு அரசு சலுகைகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதுவும் முறையாக பெற்றுத்தரப்படும்'' என்றார்.
இதையும் படிங்க: நேபாள பொதுத் தேர்தலை பார்வையிட இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு அழைப்பு...!