திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நேரு யுவகேந்திரா மைய வளாகத்தில், தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்துவரும் மாணவன் தேவேஸ்சாய் (6). இவர் சிறு வயது முதலே பல்வேறு யோகாசனங்களைச் செய்துவருகிறார்.
உலக ரத்த தான தினம் நேற்று (அக். 1) நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்திய அரசின் நேரு யுவ கேந்திரா மற்றும் சுவாமி விவேகானந்தா யோகா, ஸ்கேட்டிங் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் ரத்த தானம் வழங்குவது குறித்த விழிப்புணர்வும், ரத்தம் தானமாக வழங்கினால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தும் வகையில் தேவேஸ்சாய் கண்ணாடி டம்ளர் மீது நாற்காலியை வைத்து, அதன் மீது நான்கு செங்கல், மரப்பலகை வைத்து உசட்ராசனம், கோமுகாசனம், கருடாசனம், பத்மாசனம், பர்வதாசனம், உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சாகச யோகாசனங்களைச் செய்து ரத்த தானம் வழங்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பல்வேறு சாகச யோகாசனங்களைச் செய்து அசத்திய மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி பாராட்டி நினைவுப்பரிசு, சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிவரும் ஆசிரியர் உள்ளிட்டவர்களுக்கு நினைவுப்பரிசையும் சான்றிதழையும் ஆட்சியர் வழங்கி கவுரவித்தார்.