திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடந்துவருகிறது. திருவிழாவின் பத்தாம் நாளான இன்று மகாதீப பெருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. மகாதீபத்தை தரிசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டுள்ளனர்.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் ஏகன் அநேகன் எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில், பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், அருணாச்சலேஸ்வரர் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு அரோகரா என்ற முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று மாலை 6 மணிக்கு, அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபம் ஏற்றப்படுவதை ஒட்டி 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதற்காக இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இதுதவிர திருவண்ணாமலைக்கு 12ஆம் தேதி வரை சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: நோயாளிகளுக்கு இலவச உணவு! - 29 ஆண்டுகளாக தொடரும் சேவை!