திருவண்ணாமலை: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தில் வசித்து வரும் செல்வமணி உணவகம் வைத்த நடத்தி வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி மீனா மேல்மலையனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் வட்டார ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததால், மீனாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவசர சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநர் பவதாரணி மற்றும் மேல்மலையனூர் வட்டார ஆரம்பச் சுகாதார நிலைய செவிலியர் மேரிகரோலின் ஆகியோர் கர்ப்பிணித்தாய் மீனாவுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பயணம் செய்தனர். அப்பொழுது 108 ஆம்புலன்ஸ் வாகனம் திருவண்ணாமலை மாவட்ட மங்கலம்புதூர் கிராமத்து அருகே வந்தபோது கர்ப்பிணி தாய்க்குப் பிரசவ வலி ஏற்பட்டது.
இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தினகரன், அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் பவதாரணி மற்றும் செவிலியர் மேரி கரோலின் துரிதமாகச் செயல்பட்டு வாகனத்தை நிறுத்தி 108 ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்தனர். பிரசவத்தில் அழகிய ஆண் குழந்தையை 108 ஆம்புலன்ஸில் பெற்றெடுத்தார் மீனா.
இதனைத் தொடர்ந்து மங்கலம்புதூர் கிராமத்திலிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் குழந்தையையும் தாயையும் அழைத்துச் செல்லப்பட்டனர். துரிதமாகச் செயல்பட்டு குழந்தையின் உயிரையும் தாயின் உயிரையும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தினகரன், அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் பவதாரணி, மற்றும் மேல்மலையனூர் வட்டார ஆரம்பச் சுகாதார நிலைய செவிலியர் மேரிகரோலின் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: புவிசார் குறியீடு: சர்வதேச கவனம் பெறும் ராமநாதபுரம் 'முண்டு வத்தல்'