போளூர் தாலுகா மங்கலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. தமிழக விவசாய சங்க தலைவராக உள்ள இவருக்கு 4 மகள்கள். கடந்த 2012-ஆம் ஆண்டு 3-வது மகள் ரேணுகாவிற்கு குஜராத் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வரும் நாகேந்திரன் என்பவருடன் திருமணம் முடிந்து அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
நாகேந்திரன் வரதட்சணை கேட்டு தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 27-ந் தேதி ரேணுகாவின் தந்தையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நாகேந்திரன், “உங்களது மகள் ரேணுகா சிலிண்டர் வெடித்து தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளார்” என்று கூறியுள்ளார்.
அதனைக்கேட்ட அதிர்ச்சியடைந்த ஏழுமலை தனது குடும்பத்தினருடன் குஜராத் சென்றுள்ளார். அங்கு தனது மகள் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகவும், அதில் அவள் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். மேலும் அவரது உடற்கூறாய்வு அறிக்கையை தன்னிடம் காண்பித்ததால் தனக்கு சந்தேகம் எழவில்லை என்றதால் உடலை திருவண்ணாமலைக்கு கொண்டு வந்துள்ளார்.
இங்கு வந்த பின்னர் ஏழுமலையின் பேத்தி தனது தாயின்மீது தனது தந்தை மண்எண்ணெய் ஊற்றி தீவைத்ததாக கூறியுள்ளாள். இதனைக்கேட்ட ஏழுமலை அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து தனது மகளின் மரணத்தில் மர்மம் உள்ளதால் மீண்டும் தனது மகளின் உடலை உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
மேலும் மனுவில் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தனது மகளின் உயிரிழப்பிற்கு அவரது கணவர் காரணம் என்றால் அவரை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அதனை கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வனிதாவிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதையும் படிக்க: பண்ணை குட்டையில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு!