திருவண்ணாமலை: இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று (மே 26) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "இந்தியாவின் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் (Inauguration of New Parliament Building) சோழ அரசின் 'செங்கோல்' (Sengol) இடம் பெறுவது பெருமைக்குரிய விஷயம் என்றார். தேவாரம் மற்றும் நாதஸ்வரம் ஒலிக்க நாம் சுதந்திரம் பெற்றதை எப்படி கொண்டாடுகிறோமோ அதேபோல், தற்போது புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை நாம் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்து சனாதன தர்மம்: முந்தைய ஆட்சியில் எப்படி செங்கோல் சிறப்பு செய்யப்பட்டதோ அதேபோல், தற்போது பாஜக ஆட்சியிலும் சோழனின் செங்கோல் சிறப்பு செய்யப்படுவதாக கூறிய அவர், இதற்காக தமிழக அரசின் சார்பிலும் தமிழக மக்களின் சார்பிலும் நன்றியை கூறினார். இந்த நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறும் செங்கோல் என்பது இந்து சனாதன தர்மத்தின் அடையாளம் என்பதற்கான குறியீடு.
முன்பு அரசாட்சி நினைவாக இருந்த செங்கோல் தற்போது மக்களாட்சியின் சின்னமாக இந்த நாடாளுமன்ற வளாகத்தில் நிலை நிறுத்தப்படுகிறது என்பது நமக்கு பெருமைக்குரிய விஷயம். சில அரசியல் கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்போம் என்று சொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
தமிழக கட்சிகளுக்கு புதிய நாடாளுமன்றத்தில் இடமிருக்காது: நாடு முழுதும் உள்ள பல கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கவில்லை; ஆனால், தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சியினருடன் சில கட்சிகள் புறக்கணிப்பது என்பது ஏற்புடையது அல்ல என்றார். அப்படி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் தமிழக கட்சிகளுக்கு எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் இடமில்லாமல் போய்விடும் என்று பேசினார். இங்கு புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த கட்சிகளும் பங்கு பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அம்மணி அம்மன் மடம் மற்றும் கோயில் இடிக்கப்பட்டது வேதனை அளிப்பதாகவும், இதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர், கிரிவல பாதையில் உள்ள மதுக்கடைகள் மற்றும் மாமிச கடைகள் அகற்றப்பட வேண்டும், கிரிவல பாதையில் மிகப்பெரிய ஆக்கிரமிப்புகள் இருக்கும் நிலையிலும் அவற்றை மாவட்ட நிர்வாகம் இதுவரை முழுமையாக எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
சனாதன இந்து எழுச்சி மாநாடு: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் பாதுகாப்பை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். வரும் ஜூன் 5ஆம் தேதி 'உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்' (World Environment Day) அன்றைய தினத்தில் மீண்டும் மோடி பாரத பிரதமராக வரவேண்டும் என்று 'சனாதன இந்து எழுச்சி மாநாடு' திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது.
பாதுகாப்பு இல்லாத சூழல்: இந்த நிலையில், கடமையை செய்கின்ற அதிகாரிக்கு எதிராக ஆளும் திமுக கட்சியினர் தாக்குதல் நடத்துவது என்பது புதிதல்ல. கடமையை செய்த அதிகாரிகளின் மீது திமுக நிகழ்த்திய தாக்குதலை நான் கண்டிப்பதாக தெரிவித்தார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் காவல் துறையினருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
கள்ளச்சாராய மரணங்கள்; தமிழக அரசுக்கு அவமானம்: அத்துடன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர் குலைந்து உள்ளதாகவும், இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக தான் தமிழகத்தில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புக்கு ஆளுநர் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். கள்ளச்சாராய உயிரிழப்புகள் என்பது தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள அவமானம் என்றும் இது தமிழக அரசின் நிர்வாக தோல்வி என்றும் கடுமையாக சாடினார். இத்தகைய சம்பவங்களுக்கு முடிவு கட்டும் வகையில் 'பூரண மதுவிலக்கு'-யை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 'செந்தில் பாலாஜி தன்னுடன் மு.க.ஸ்டாலினையும் சிறைக்கு கூட்டிப் போவார்' - ஷியாம் கிருஷ்ணசாமி சர்ச்சை பேச்சு