திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் மூலவர் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சியளித்த நிகழ்வு இன்று (ஜனவரி 16) நடைபெற்றது.
இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன், பராசக்தியம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதன்பின் அண்ணாமலையார் நந்தி பகவானுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும்.
அண்ணாமலையார் நந்தி பகவானுக்கு காட்சியளிக்கும் நிகழ்வையொட்டி இன்று அதிகாலையில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று பின்னர் காய்கறிகள், பழங்கள், முருக்கு, லட்டு, அதிரசம், பணம் உள்ளிட்டவைகளை கொண்டு மாலைகள் அணிவிக்கபட்டு சிறப்பு அலங்காராம் செய்யப்பட்டிருந்தது.
நந்தி பகவானுக்கு காட்சியளித்த பின்னர் அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலையம்மன் திட்டிவாசல் வழியாக சூரிய பகவானுக்கு காட்சியளித்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கல் அன்று அண்ணாமலையார் நந்தி பகவானுக்கு காட்சியளித்து சூரியனுக்கு காட்சியளிப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.
இதனை தொடர்ந்து அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலையம்மன் மற்றும் பராசக்தி அம்மன் மாடவீதிகளில் 3 முறை வலம் வருகின்றனர். இன்று மாலை 6 மணியளிவில் திருவூடல் தெருவில் 3ஆம் முறையாக மாடவீதியுலா வந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனுக்கு இடையே திருவூடல் திருவிழா நடைபெறும்.
இதையும் படிங்க:பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்குகிறது