திருவண்ணாமலை செட்டித் தெருவிலுள்ள அமுதா திருமண மண்டபத்தில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக இளைஞர் அணியினர் அறிமுகக் கூட்டம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஜீவானந்தம் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில பாஜக வர்த்தக அணி தலைவர் எஸ்.தணிகைவேல் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். மேலும் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் இளைஞரணி நிர்வாகிகளுக்கு வழங்கி, ஒவ்வொரு நிர்வாகியும் ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பேசிய ஜீவானந்தம், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் வரை ஊராட்சி செயலாளர்கள் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்றுக்கொண்டு வீடு இருப்பவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் என தகுதி இல்லாதவர்களுக்கு, விதிமுறைகளை மீறி வீடுகளை வழங்கியுள்ளனர்.
இதை இளைஞரணி நிர்வாகிகள் மாவட்டத்திலுள்ள 860 ஊராட்சிகளிலும், ஊராட்சி செயலாளர்களிடம் சென்று வீடு வழங்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல் பெற வேண்டும் என்றும், ஊராட்சி செயலாளர் பட்டியல் அளிக்காத பட்சத்தில் பாஜக வழக்கறிஞர் அணியின் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் உதவியோடு பெயர் பட்டியலை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும், என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'திருமண அழைப்பிதழ் இருக்கோ இல்லையோ கரோனா பரிசோதனை சான்றிதழ் இருக்கணும்'