மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடில், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும்.
இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவதலமாகும்.
காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் கொண்ட அகோரமூா்த்தியாக தனி சன்னிதியில் அருள்பாலித்து வருவது சிறப்புக்குரியதாகும். மேலும், நவ கிரக ஸ்தலங்களில் கல்வி, தொழில் ஆகியவற்றின் அதிபதியான புதன் பகவானுக்குரிய (புதன் தலமாகவும்) விளங்குகிறது.
இதையும் படிங்க: திருப்பதி லட்டு விவகாரம்: அதிகாலை 2 மணிவரை சோதனை; பல ஆவணங்களை எடுத்துச் சென்ற ஆந்திர குழு?
ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்றும் 7 ஜென்ம பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.
தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது. மேலும் இங்கு நடைபெறும் இந்திர பெருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும். இத்தகைய பல்வேறு சிறப்புகள் உடைய இக்கோயிலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வழிபாடு செய்தார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோயிலின் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்கள் பயன்பாட்டிற்காகப் புதிதாக கட்டப்பட்ட சுத்திகரிப்பட்ட குடிநீர் தொட்டியை துர்கா ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பக்தர்கள் பலரும் துர்கா ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்