திருவண்ணாமலை நாடாளுமன்றத்தொகுதி வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் உடனிருந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில்,
நிச்சயமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றி பெறும். திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக புதிய ரயில் பாதை அமைப்பதற்கான பணி இன்னும் வேகப்படுத்தபட வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நான் உறுதுணையாக இருப்பேன்.
நம்முடைய திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் யானை இல்லை என்ற குறை இருக்கிறது என்று பக்தர்கள் கூறினர். தேர்தல் முடிந்தவுடன் ஆலயத்தில் எனது சொந்த செலவில் ஒரு யானை வாங்கிக் கொடுக்க நான் முடிவு செய்துவிட்டேன். திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை ஏற்கனவே நாங்கள் கொடுத்திருக்கிறோம்.
தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கின்ற காரணத்தினால் முதலமைச்சர் உடனடியாக அதை அறிவிக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் சட்டமன்றத்திலேயே முதலமைச்சர் மூலமாக திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க உரிய நடவடிக்கைகளை நாங்கள் அனைவரும் சேர்ந்து மேற்கொள்வோம் எனக் கூறினார்.