திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் ஆவின் நிறுவனத்தின் பால் குளிரூட்டும் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் உற்பத்தியாளர்கள் தங்களது பாலை விற்பனைசெய்வது வழக்கம்.
இந்நிலையில் திருவண்ணாமலையில் செயல்பட்டுவரும் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் தண்ணீர் கலந்த பால் விற்பனை செய்யப்படுவதாக ஆவின் மேலாளர் உலகநாதனுக்குத் தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் ஆவின் ஊழியர்கள் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டுவந்தனர். அப்போது ஓலைப்பாடி கிராமத்திலிருந்து பால் கேன்கள் ஏற்றிவரும் செல்வம், கீரனூர் கிராமத்திலிருந்து பால் ஏற்றிவரும் ராஜ்குமார், மேல்பாளானந்தல் கிராமத்திலிருந்து பால் ஏற்றிவரும் சம்மந்தம், நாச்சானந்தலிலிருந்து பால் ஏற்றிவரும் கார்த்தி, ராதாபுரம் கிராமத்திலிருந்து பால் ஏற்றிவரும் மூர்த்தி, மங்கலம் கிராமத்திலிருந்து பால் ஏற்றிவரும் ரகுராம் ஆகிய ஆறு நபர்களும், திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள முரளி, கோபி ஆகிய இரண்டு நபர்களும் கூட்டாக இணைந்து தனியார் பால் வியாபாரிகளிடம் பாலை கொடுத்து அதற்காகக் கணிசமான தொகையைப் பெற்றுவந்துள்ளனர்.
தனியார் பால் வியாபாரிகளிடம் பாலை கொடுப்பதால் பாலின் அளவு குறைந்துவிடும். அதனால் இவர்கள் பாலில் தண்ணீர் கலந்து ஆவின் நிறுவனத்தில் விற்றுவந்துள்ளனர். ஆவின் பாலகத்தில் பாலை பரிசோதனை செய்யாமல் இருக்க அங்கு பணியாற்றும் சேகர், கிருஷ்ணமூர்த்தி, ஷ்யாம் ஆகிய மூன்று பேரும் இவர்களுக்கு உதவியாக இருந்துள்ளனர்.
ஆவின் பாலகத்தில் தண்ணீர் கலந்த பால் வருவதைக் கண்டறிந்த ஆவின் மேலாளர் உலகநாதன், இது குறித்து திருவண்ணாமலை கிராமியக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட கிராமிய காவல் துறையினர், ஆவின் பாலகத்திற்கு வரும் பாலை தனியார் பாலகத்தில் விற்பனைசெய்வதை உறுதிசெய்தனர்.
பின்னர் தனியார் பால் வியாபாரிகளான முரளி, கோபி, செல்வம், ராஜ்குமார், சம்மந்தம், கார்த்தி, மூர்த்தி, ரகுராம் ஆகிய எட்டு பேரையும் கைதுசெய்து, அவர்கள் மீது இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய ஏழு வேன்கள், 50 பால் கேன்கள், ஒரு கார் ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர்.
கலப்படத்திற்கு உதவியாக இருந்த ஆவின் பாலக ஊழியர்கள் சேகர், கிருஷ்ணமூர்த்தி, ஷ்யாம் ஆகிய மூன்று பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆவின் பாலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க... டாஸ்மாக் மதுவுடன் கலப்படம்: 4 பேர் கைது