திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். தமிழ்நாட்டின் முக்கிய ஆன்மிக கோயில்களில் ஒன்றாகும்.
இந்த கோயிலுக்குத் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவர். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
இந்நிலையில் 2024 புது வருடப் பிறப்பை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக இன்று ஆங்கில புத்தாண்டு தினம் என்பதால் அதிகாலையில் அண்ணாமலையார் கோயிலில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றது.
அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ராஜகோபுரம் வழியாக நீண்ட வரிசையில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், அம்மணி அம்மன் கோபுரம் வழியே பக்தர்கள் கோயிலுக்கு உள்ளேச் செல்ல வரிசை முறையாகச் செய்யாததால், பக்தர்கள் முண்டி அடித்துக் கொண்டு கோயிலுக்கு உள்ளேச் செல்ல முற்பட்டபோது பக்தர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். மேலும், கோயில் நிர்வாகம் அறங்காவலர் குழு ஆகியவை இருந்தும் கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல முறையாக வழிவகை செய்யவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முன்னதாக, அண்ணாமலையார் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு நாள்தோறும் திருக்கோயில் சார்பில், லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று (டிச.31) சென்னையில் காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார்.
இதையும் படிங்க: புத்தாண்டு 2024: பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்..! பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு வழிபாடு..!