திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மணிக்கல் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த விஜயசாந்தி என்பவரை 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ராமமூர்த்தி தனது மனைவி சாந்தி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (செப். 29) விஜயசாந்தி பூச்சி மருந்து குடித்துவிட்டதாகக் கூறி அவரை, ராமமூர்த்தி செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளார். அப்போது அவருக்குத் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் விஜயசாந்தியின் பெற்றோர் தனது மகளை சந்தேகத்தால் ராமமூர்த்தியும் அவரது தாயாரும் அடித்து உதைத்து துன்புறுத்தி உயிர் போகும் நிலையில் தாக்கி வாயில் விஷம் ஊற்றி கொலை செய்துவிட்டதாகக் கூறி, இருவரையும் கைது செய்யக்கோரி மேல்செங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவல் நிலையத்தில் சரணடைய வந்த ராமமூர்த்தியை காவல் துறையினர் விசாரணைக்காக கொண்டுசென்றனர்.
அதன்பிறகு செங்கம்-பெங்களூரு சாலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமமூர்த்தி, அவரின் தாயார் மீது திருவண்ணாமலை கோட்டாட்சியர் தலைமையில் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக மேல்செங்கம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் உத்தரவாதத்தின்பேரில் உறவினர்கள் கலைந்துசென்றனர்.