திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட சீனந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி முனியப்பன். இவர் தனது பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரை விளைவித்துள்ளார். தற்போது, கரும்பை வெட்டி எடுத்து சர்க்கரை ஆலைக்குக் கொண்டு செல்லும் பணிகளில் விவசாயி முனியப்பன் ஈடுபட்டு வருகிறார்.
முதல் கட்டமாக 10 டன் அளவிற்குக் கரும்பை வெட்டி எடுத்து சர்க்கரை ஆலைக்குக் கொண்டு செல்ல முற்பட்டபோது சுற்றி உள்ள விவசாயிகள் அவரது நிலத்திற்கு வாகனம் செல்ல வழி விடாமல் தடுத்துள்ளனர். இது குறித்துப் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று உரியத் தீர்வு ஏற்படாத நிலையில் ஆரணி கோட்டாட்சியரிடம் முறையிட்டுள்ளார்.
மேலும், அந்த பகுதி விவசாயிகள் வெட்டிய கரும்புகளை எடுத்துச் செல்ல வழி விடாமல் தடுப்பதனால், வெட்டப்பட்ட 10 டன் கரும்புகள் ஏறத்தாழ 30 நாட்களுக்கும் மேலாகச் சர்க்கரை ஆலைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் காய்ந்து வருவதாக விவசாயி முனியப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், இன்று (டிச.15) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த விவசாய குறைதீர்வு கூட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி முனியப்பன் தனது குடும்பத்துடன் தலையில் கரும்பைச் சுமந்து தனக்கு நியாயம் வழங்கக் கோரி ஆட்சியர் முன்பு முறையிட்டார்.
மேலும், விவசாயி முனியப்பன் குடும்பத்திற்கு ஆதரவாகக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளும் எழுந்து நின்று அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட முனியப்பன் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அழைத்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், வாரம்தோறும் நடைபெறும் விவசாய குறைதீர்வு கூட்டத்தில் கட்டாயமாக மாவட்ட ஆட்சியர் பங்கேற்று விவசாயிகளின் குறைகளைக் கேட்டு அறிந்து உடனடியாக குறைகளைத் தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் சிறுதானிய உணவு திருவிழா கோலாகலம்.. 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் செய்து அசத்தல்..