திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது என்றும், மலையினை சுற்ற வரும் ஆன்மிக பக்தர்களின் முன்னிலையில் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (ஜன.8) காவி வேட்டி அணிந்த கஞ்சா சாமியார் ஒருவர், கஞ்சா போதை தலைக்கேறி அங்கிருந்த நடைபாதை கடைகளை அடித்து நொறுக்கினார்.
அவரை அருகில் இருந்த நபர்கள் பிடிக்க முடியாததால், அங்கிருந்த பல கடைகளை அடித்து பொருட்களை உடைத்துள்ளார். பொதுமக்கள் ஒன்றிணைந்து அவரைப் பிடித்து கை மற்றும் கால்களை கட்டி போட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் பொதுமக்களையும் கிரிவலம் செல்லும் பக்தர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனை களைகட்டி வருவதாகவும், திருவண்ணாமலை நகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா போதை தலைக்கேறிய லாரி ஓட்டுநர் ஒருவர் கிரிவலப் பாதையில் ஆடைகளை விலக்கி, கிரிவலம் செல்லும் பக்தர்கள் முன் ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் தற்போது காவி வேட்டி கட்டிய நபர் ஒருவர் கஞ்சா போதையில் கடைகளை அடித்து உடைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல் தொடக்கம்