திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த நாராயணங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சங்கர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், மணிகண்டன், ராஜா, பாலகிருஷ்ணன் ஆகிய நான்கு நண்பர்களும் சேர்ந்து அதே பகுதியில் உள்ள விவசாய கிணறு அருகில் அமர்ந்து மது அருந்திவிட்டு சீட்டு விளையாடியுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் சங்கரை, அவரது நண்பர்கள் அருகிலிருந்த விவசாய கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளனர். இது குறித்து சங்கரின் மனைவி சத்யா தானிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து காவல் துறையினர் குற்றவாளிகளைக் கைது செய்துள்ள நிலையில், பாலகிருஷ்ணன் என்ற குற்றவாளிக்கு மட்டும் கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா ஒப்புதல் வாக்குமூலம் சான்றில் கையெழுத்து போட மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சங்கரின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட்ட பின்னரே போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.