திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வடமாதிமங்கலம் ஏரியில் கடந்தாண்டு நவம்பரில் சுமார் 59 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகம், தலை பகுதி சேதப்படுத்தப்பட்டு, பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இவ்வழக்கை கடந்த ஏழு மாதங்களாகத் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இக்கொலை வழக்கில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த ராமதாஸ், தமிழ்ச்செல்வன், பாரதி ஆகிய மூவரையும் காவல்துறையினர் நேற்று முன்தினம்(மே.10) கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் லட்சுமி, தனது மகன் பிரேம் குமாருடன் கருவேப்பிலை கடை நடத்தி வந்தார்.
தொடர்ந்து வியாபாரம் செய்ய முடியாததால், கடையை விற்பனை செய்ய முடிவெடுத்த லட்சுமி, அவரது மகன் பிரேம்குமார், சென்னையைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரிடம் கோயம்பேட்டில் இயங்கிவந்த கடையை ரூ.27 லட்சத்து 50 ஆயிரத்திற்கு விற்று, காலி மனை ஒன்றை வாங்கித் தரும்படி கூறினர்.
இதைத்தொடர்ந்து ராமதாஸ் முன்பணமாக ரூ.17 லட்சத்தை கொடுத்து விட்டு, பின்னர் லட்சுமியிடமிருந்து காலிமனை வாங்குவதற்காக ரூ.7 லட்சத்தை பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
நீண்ட நாளாகியும் மனை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் ஆறுமுகம் என்கிற ராமதாஸ் ஏமாற்றி வந்துள்ளார். இதில் ராமதாசுக்கும், லட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ராமதாஸ் லட்சுமி மற்றும் அவரது மகன் பிரேம்குமாரை ஆகிய இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டி, சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் பாரதி, வியாசர்பாடியை சேர்ந்த ராஜு ஆகிய மூன்று பேரை கொண்டு, அடுத்தடுத்து இருவரையும் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியது தெரியவந்தது. பிரேம் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே ஒருவர் கைதாகி சிறையில் உள்ளதும், லட்சுமி கொலை வழக்கில் தற்போது கைதான மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.