திருவண்ணாமலை: வெறையூருக்கு உட்பட்ட சு.கம்பப்பட்டு கிராமத்தைச் சோந்தவர்கள் மாபூப்கான் - தில்ஷாத் தம்பதியினர். இத்தம்பதியினருக்கு நசிரின் (15), நசீமா(15), ஷாகிரா (12) உள்பட ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூவரும் சு.வாளவெட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்தனர்.
இந்நிலையில் இவர்கள் மூவரும் நேற்று (ஜன.15) ஆடுகளை குளிப்பாட்ட சு.கம்பப்பட்டில் உள்ள ஏரிக்கு ஆடுகளை ஓட்டிச் சென்றுள்ளனர். அப்போடு ஆடுகளை குளிப்பாட்டுகையில் நசிரின் எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கியுள்ளார். இதனைக் கண்ட சகோதரிகள் இருவரும் நசிரினை காப்பாற்ற குட்டையில் குதித்துள்ளனர்.
இதில் அவர்களும் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற கிராமத்தினர், ஏரியில் மூழ்கி உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டுள்ளனர். தகவலறிந்த வெறையூர் காவல்நிலையத்தினர் மூவரின் உடல்களையும் உடற்கூராய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் உள்ளிட்டோரும் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண் குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டம் எனும் சவக்குழி; தப்பிக்க வழி என்ன?