திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கோணந்தகால் பகுதியைச் சேர்ந்தவர் வி.ஆர்.சாமி.
இவருக்கு சொந்தமாக சுமார் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்து வந்தன. அதனை, மேய்ச்சலுக்காக ஊர் ஊராக ஐந்தாறு பேர் கொண்ட கும்பல் ஓட்டிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், செ.சொர்பனந்தல் அருகே ஆடுகள் சாலையை கடக்க முயன்றபோது, செங்கத்திலிருந்து சாத்தனூர் சென்றுகொண்டிருந்த பால் லாரி, ஆடுகள் மீது மோதியது. இதில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் உடல் நசுங்கி உயிரிழந்தன.
இதனைக் கண்ட ஆடு மேய்ப்பவர்கள் லாரியை துரத்திசென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர், காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், விபத்து ஏற்படுத்திய டேங்கர் லாரியை பறிமுதல் செய்து லாரி ஓட்டுநரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும், வயிற்றுப் பிழைப்புக்காக ஆடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்த தங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என ஆட்டின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.