திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள துளுவன்குட்டை பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் எரிசாராயம் காய்ச்சுவதற்காக 500 லிட்டர் சின்டெக்ஸ் மூலம் ஊறல் தயார் செய்து வைத்திருப்பதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் மேற்பார்வையில், வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓலப்பாடி கிராமத்திற்கு அருகேயுள்ள துளவன்குட்டை என்ற இடத்தில் காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, அங்கு 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சின்டெக்ஸ் டேங்க்குகள், 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பேரல் என மொத்தம் 1,250 லிட்டர் எரிசாராய ஊறலை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
ஆனால், அந்த இடத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால், எரி சாராய ஊறலை மட்டும் காவல் துறையினர் அழித்தனர். இதையடுத்து, எரிசாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் தயாரித்து வைத்திருந்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் 4,725 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்