திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆராசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமச்சந்திரன். இவர் நெல் அறுவடை இயந்திரம் வைத்துள்ளார். இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில், முதல் மகள் கோமதி கல்லூரியில் படித்து வருகிறார். இரண்டாவது மகள் குமுதா பிளஸ்2 படித்து வருகிறார். மூன்றாவது மகள் மீனா 10 ஆம் வகுப்பும், கடைசி மகள் துர்கா 7ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இவர்களின் 3ஆவது மகள் மீனா தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி விடுமுறையில் இருந்து வருகிறார். மீனா பாடம் பயிலும் நேரம்போக மீதமுள்ள நேரங்களில் தனது பெற்றோருக்கு உதவியாக விவசாயம் செய்து வருகிறார். விவசாய நிலத்தில் ஏர் ஓட்டுவது, நாற்று நடுவது, களை எடுப்பது, அண்டை வெட்டுவது என அனைத்து விவசாய பணிகளையும் ஆர்வத்துடன் செய்து வருகிறார்.
அறுவடை காலம் என்பதால் மீனாவின் தந்தை ஓய்வில்லாமல் நெல் அறுவடை இயந்திரம் இயக்கி வருகிறார். இதனைக் கண்ட மீனா தனது தந்தைக்கு உதவியாக இருக்க வேண்டும் என எண்ணி தமக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த மூன்று ஏக்கர் நிலத்தில் அறுவடை இயந்திரத்தை இயக்கி முழுவதையும் அறுவடை செய்து அசத்தியுள்ளார்.
இதுமட்டுமின்றி தினமும் தங்கள் கிராமத்திலுள்ள பல்வேறு விவசாய நிலத்தில் அறுவடை இயந்திரத்தை தானே இயக்கி அறுவடை பணிகளை செய்து, தனது தந்தையின் பாரத்தை குறைத்து வருகிறார். இன்றைய காலகட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுமுறையில் வெட்டியாக ஊர் சுற்றும் மாணவர்கள் மத்தியில் சிறுவயதிலேயே தனது தந்தைக்கு உதவியாக தந்தையின் பாரத்தைக் குறைக்கும் மாணவியின் செயல் காண்போரை நெகிழ வைத்துள்ளது.
இன்றைய காலத்தில் பலரும் இயக்க தயங்கும் இந்த நெல் அறுவடை இயந்திரத்தை இளம் வயதிலேயே சிறுமி இயக்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள் என்பதை இந்த பத்தாம் வகுப்பு மாணவி நிரூபித்துக் காட்டியுள்ளார். இதையறிந்த ஊராட்சி மன்ற தலைவர், கிராம மக்கள் ஆகியோர் மீனாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அடுத்த தலைமுறை விவசாயத்தை காப்பது ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான் என்பதை ஒரு படி மேலே சென்று நிரூபித்து காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: விவசாயம் மீது ஆர்வம் கொண்ட 4ஆம் வகுப்பு மாணவன்