திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருகேயுள்ள கோலடியைச் சேர்ந்தவர் ஆஷிக் (28). இவர் வீடுகளுக்கு ஃபால்சீலிங் அலங்காரம் செய்யும் வேலை செய்து வந்தார். ஆஷிக் குன்றத்தூர், தெற்கு மலையம்பாக்கத்தில் உள்ள பொன்னம்மாள் என்பவரது வீட்டில் அலங்காரப் பணி செய்து கொண்டிருந்த நிலையில், செல்போனில் பேசியபடி வீட்டின் மாடிக்குச் சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின்கம்பியின் மீது அவர் கைபட்டதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் ஆஷிக் மயங்கினார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆஷிக் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து குன்றத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்த ஆஷிக்கின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி அண்ணன், தங்கை உயிரிழப்பு!