திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த வி.கே.என் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (24). இவருக்குத் திருமணமாகி ஐந்து வயதில் குழந்தை ஒன்று உள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வெங்கடேசன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. மாணவியைத் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைக் கூறிய வெங்கடேசன், மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மகளின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால், மாணவியின் தாய் அவரிடம் விசாரித்துள்ளார்.
அப்போது வெங்கடேசன் திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் தொந்தரவு செய்து வருவது குறித்து மாணவி தெரிவித்துள்ளார். இதனையடுத்து திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் இளைஞர் வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருத்தணி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க : ஆம்புலன்ஸ் விபத்து: கர்ப்பிணி உட்பட மூவர் உயிரிழப்பு