கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக கடந்த 26ஆம் தேதி தமிழ்நாடு அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. இதனால், திருவள்ளூர் பேரம்பாக்கம் கிராமத்தில் திறந்திருந்த கடைகளை மூடுமாறு கிராம நிர்வாக அலுவலர்கள் அறிவுறுத்தினார்கள்.
இதற்கு சில கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, அப்பகுதிக்கு விரைந்த மப்பேடு காவல் துறையினர் அவர்களை விரட்டி அடித்தனர்.
அப்போது கடைகளில் பொருள்கள் வாங்க வந்த பிரவீன், ரமணன், பிரபு ஆகிய மூன்று இளைஞர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அடித்து துன்புறுத்தியதாகவும், அவர்களின் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டு, இரு சக்கர வாகனங்களையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மூன்று பேரும் திருவள்ளூரில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்கள் மீது பொய் வழக்கு பதிந்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் புகார் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: கரோனா கண்டறிய லேப் வசதி இல்லை - பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு