திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசு. இவரது மனைவி நளினி. இவர்களது மகள் ரோகிதா (20). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைபாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார்.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த ரோகிதா, செல்போனில் யாரிடமோ நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது தாயார், இது குறித்து கேட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த ரோகிதா, தன் அறைக்குச் சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்த பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே ரோகிதா உயிரிழந்தார்.
இதையடுத்து, தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மப்பேடு காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையை தொடங்கினர். முதல்கட்ட விசாரணையில், ஊராட்சி மன்ற தலைவரான வெங்கடேசன் என்பவரின் மகன் மகாதேவன், ரோகிதாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலித்து வந்ததாகவும், பின்னர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததாகவும் தெரியவந்தது.
இதனால் ரோகிதா தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மகாதேவனை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.