காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம், காமாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் கட்டிடங்களில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சுஜித்வேலன் (8) தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று (ஆகஸ்ட் 4) மாலை வெங்கடேஷ் தனது மகன் மற்றும் உறவினர்களுடன் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச்சென்றுள்ளார்.
அங்கு சுஜித்வேலனை குளிக்க வைத்துவிட்டு கிணற்றின் கரையில் நிறுத்திய பின்பு வெங்கடேஷ் குளித்துக் கொண்டிருந்தார். அப்போழுது எதிர்பாராதவிதமாக சுஜித்வேலன் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதைப் பார்த்த வெங்கடேஷ், மகனை காப்பாற்ற முயன்றார். அதற்குள் சுஜித்வேலன் கிணற்றில் மூழ்கினார்.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு வந்த அருள் ஜோதி தலைமையிலான பூந்தமல்லி தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மூழ்கிய சிறுவனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து குன்றத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சிறுவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குடும்ப பிரச்னை: மனைவி தூக்கிட்டுத் தற்கொலை!