திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அடுத்த கோவூர் பகுதியைச் சேர்ந்தவர் மேரி (45). இவர் அதே பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்துவருகிறார்.
நேற்று (செப்.28) இரவு வழக்கம் போல் மேரி வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமாபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் (50) என்பவர் குடிபோதையில் மேரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் ரவீந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மேரியை சரமாரியாக குத்தியுள்ளார். தொடர்ந்து ரவீந்திரனு தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டார்.
உடனே அவ்வழியாக வந்த பொதுமக்கள் இருவரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அதில் ரவீந்திரன் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இதுகுறித்து மாங்காடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், "சென்ற 20 ஆண்டுகளுக்கு முன்பு மேரியின் கணவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து மேரி ராமாபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரனுடன் வசித்து வந்துள்ளார்.
அண்மையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துவிட்டனர். சம்பவத்தின் போது ரவீந்திரன் மேரியை தன்னுடன் வீட்டிற்கு வர அழைத்துள்ளார்.
அதற்கு மேரி மறுத்ததால் கொலை செய்ய முயற்சித்துள்ளார்" என்பது தெரியவந்தது. தற்போது ரவீந்திரன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண்களை ஏமாற்றிய வழக்கு: கன்னியாகுமரி காசியின் நண்பரை பிடிக்க சிபிசிஐடி தீவிரம்!