திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமாரி. இவர் கேட்டரிங் சென்டர், ஆடியோஸ் நடத்தி வருகிறார். இவர் தனது தொழிலை விரிவு செய்வதற்காக வங்கிக் கடன் பெற முயற்சித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நிரஞ்சனி என்பவர், தனது சகோதரர் சூசைநாதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள், வியாபாரம் செய்பவர்களை நோட்டமிட்டு அவர்களிடம் மத்திய அரசின் கடன் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், கடன் பெற்று தருவதாகக் கூறியுள்ளார்.
அப்போது பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, ஜே.பி. நட்டா, வெங்கையா நாயுடு, முன்னாள் பாஜக தமிழ்நாடு தலைவரும் தற்போதைய தெலங்கானா ஆளுநராகவும் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை காண்பித்து, தனக்கு இவர்கள் அனைவரும் மிகவும் நெருக்கம் என்றும், அதன் மூலம் தங்களுக்கு 3 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தர முடியும் என்றும் செல்வகுமாரியிடம் கூறி, ரூ. 6 லட்சத்தைக் கமிஷனாக வாங்கியுள்ளார்.
ஆனால், நெடுநாட்களாகியும் வங்கிக்கடன் பெற்றுத்தராததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான செல்வகுமாரி ரூ.6 லட்சம் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்குப் பணத்தைத் தர முடியாது என்றும், மீறி கேட்டால் கொலை செய்துவிடுவேன் என்றும் பகிரங்கமாக மிரட்டியுள்ளார், நிரஞ்சனி.
இதனையடுத்து செல்வகுமாரி திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்தப் புகாரின் பெயரில், காவல்துறையினர் நிரஞ்சனி, அவரது சகோதரர் சூசைநாதன் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.
பாஜக தேசியத் தலைவர்களுடன் எடுத்த புகைப்படத்தை காண்பித்து வியாபாரிகள், தொழில்அதிபர்களிடம் நூதன முறையில் மோசடி செய்த பெண்ணைக் கைது செய்ததால், மேலும் பல திடுக்கிடும் தகவல் கிடைக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் 4 அரசு ஊழியர்கள் கைது