திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த எலவம்பேடு கிராம ஏரிக்கரைப் பகுதியில் வசித்து வந்த 52 இருளர் இன மக்களுக்கு, உத்தண்டி கண்டிகை கிராமத்தில் இடம் ஒதுக்கப்பட்டது.
இடம் ஒதுக்கியபோது அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தருவதாக அரசு அலுவலர்கள் உறுதியளித்திருந்தனர். அனால் தற்போது வரை குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாததால் அம்மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பலமுறை முறையிட்டும் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கண்டுகொள்ளவில்லை.
இது தொடர்பாக, தமிழ் நாளிதழில் ஒன்றில் செய்தி வெளியானதையடுத்து, மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி ஜெயசந்திரன் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தார். பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக உத்தண்டி கண்டிகை கிராம இருளர் இன மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்து நான்கு வாரங்களில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:பெண்னை தாக்கிய விவகாரம்: காவலர்கள் மூன்று பேருக்கு தலா 1 லட்சம் அபராதம்