திருவள்ளூர் மாவட்டம், கடையநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1374 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன், தொல்லியல் துறை அமைச்சர் மாபா. பாண்டியராஜனும் இணைந்து வழங்கினர்.
பின்னர் பேசிய செங்கோட்டையன், "பள்ளிக்கல்வித்துறையில் இந்தாண்டு 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று கட்டங்களாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 15.38 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் மூன்று மாதத்திற்கு பிறகு 2017, 20118ஆம் ஆண்டுகளில் படித்த விடுபட்ட முன்னாள் மாணவர்களுக்கு நான்காவது கட்டமாக வழங்குவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய இந்த திட்டத்தில் இன்றுவரையிலும் 54.62 லட்சம் மடிக்கணினி வழங்கி, இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக கல்வி வரலாற்றில் இடம்பெற்றுள்ளோம். தமிழ்நாட்டில் புதிதாக திறக்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி வகுப்பில் 67 ஆயிரம் ஏழை எளிய மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் ரூ.10 ஆயிரத்துக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு நியமனம் செய்து கொள்ளலாம். ஆசிரியர் தேர்வு கவுன்சிலிங் முடிந்தபின் ஆசிரியர் தேவைப்படும் இடங்களில் பணியிடங்கள் நியமிக்கப்படும். கல்விக்காக தனி சேனல் மிக விரைவில் முதலமைச்சர் கைகளால் திறக்கப்பட உள்ளது. எல்லாம் துறைகள் சார்பாக மாணவர்கள் தெரிந்து கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றும் கூறினார்.