திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, அம்பத்தூர், பூவிருந்தவல்லி, திருவள்ளூர், திருவொற்றியூர் மாதவரம், மதுரவாயல், திருத்தணி ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைப்பெற்ற முடிந்தது.
இதையடுத்து வாக்குப்பதிவான இயந்திரங்கள் காவல் துறையினரின் பாதுகாப்புடன் பெருமாள்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து கட்சி முகவர்கள், தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மின்னணு இயந்திரங்கள் உள்ள அறைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா கூறுகையில், ”மே இரண்டாம் தேதி வரை துணை ராணுவத்தினர், சிறப்பு காவல் படை, உள்ளூர் காவல் துறையினர் என மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்தில் வாக்கு எண்ணும் மையம் கண்காணிக்கப்படும். அதுமட்டுமல்லாது சிசிடிவி கேமிராக்கள் மூலமும் வாக்கு எண்ணும் மையங்கள் கண்காணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.
அதேபோல் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேப்பம்பட்டில் உள்ள வாக்கு எண்ணும் மையமான தனியார் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அறையில் வைத்து பூட்டி சீல் வைத்தனர்.