திருச்சி: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு வருடமும் தை மாதம் பொங்கல் பண்டிகைக்கு கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திருச்சியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் திருச்சி, திருவாரூர், பெரம்பலூர் அருகில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும், 700க்கும் மேற்பட்ட காளைகளும் கலந்து கொள்ளும்.
ஜல்லிக்கட்டை காண்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அந்த வகையில் பெருமை பெற்ற இந்த ஜல்லிக்கட்டுக்காக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூரியூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பளவில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்ட அரசு திட்டமிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான அரசாணையை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி, இன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இந்த மைதானத்தில் அலுவலகம், முக்கிய விருந்தினர் தங்குவதற்கான அறைகள், ஜல்லிக்கட்டு வீரர்கள் உடை மாற்றுவதற்கான அறைகள், ஜல்லிக்கட்டு மைதானத்தில் இரண்டு பகுதிகளிலும் பார்வையாளர் பார்ப்பதற்கான பிரமாண்ட பார்வையாளர் மாடம் உள்ளிட்டவை அமைய உள்ளது.
இங்கு ஜல்லிக்கட்டு மைதானம் சுமார் 810 பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் 9 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு மைதானத்திற்குள் வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ராட்சத ரோஜா பூ மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநிலங்களலவை உறுப்பினர் திருச்சி சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், கதிரவன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், அப்துல் சமது மற்றும் துறை அதிகாரிகள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தலைசிறந்த 100 மாநகரங்களின் பட்டியலில் 34 வது இடம்பிடித்த சென்னை! திருச்சி, சேலம், கோவையும் அசத்தல்! - CHENNAI IN TOP 100 CITIES
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவது குறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாளை இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதிலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளோம். மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படுவதில்லை. பட்ஜெட் உள்ளிட்ட எந்த விதத்திலும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது." என்று உதயநிதி ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.