திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதியில் 399 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். திருத்தணி அமிர்தபுரம், ஆலமரம் தெரு பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை பகுதியில் 10க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மின்தடை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக வாக்குப்பதிவு தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் கால தாமதம் ஏற்பட்டது.
அமிர்தபுரம் வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளர் கோ. அரி சுமார் அரை மணி நேரம் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த நிலையில் திடீரென்று மின்னணு வாக்கு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே மின்னணு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால், வாக்களிக்க முடியாமல் அதிமுக வேட்பாளர் திரும்பிச் சென்றார். திருத்தணி தொகுதியில் உள்ள பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படுவதால், வாக்குப்பதிவு நடைபெறுவதில் தாமதம் ஏற்படுவதாக வாக்காளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: பாஜக பணம் பட்டுவாடா... வேட்பாளர்கள் போராட்டம்