முன்னாள் தலைமைச் செயலாளரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பா.ராம மோகன ராவ் பெயரால் டாக்டர் ஆர்.எம்.ஆர். பாசறை என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவால் பாதிப்புக்குள்ளாகியுள்ள பத்தாயிரம் குடும்பங்களுக்கு ஐந்து கிலோ அரிசி இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் ஜேஜே நகரில் 250 குடும்பங்களுக்கு ஐந்து கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டன. இதற்கிடையே, பொதுமக்களுக்கு ராம மோகன ராவ் விடுத்துள்ள வேண்டுகோள் பின்வருமாறு, “நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், ஏழை கூலி தொழிலாளர்கள், கட்டிட பணியாளர்கள், சிறு வணிகர்கள் போன்ற அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஏழை மக்கள் அனைவருக்கும் டாக்டர். ஆர்.எம்.ஆர். பாசறை உதவி செய்ய விரும்புகிறது
ஏழை எளிய மக்களை தனிமைப்படுத்தி தவிக்க விடக்கூடாது. இவர்கள் அனைவரையும் தேடிச் சென்று நாம் உதவ வேண்டும். பணம் படைத்தவர்களும் மனம் படைத்தவர்களும் இந்த சமுதாயப் பணியில் டாக்டர். ஆர்.எம்.ஆர். பாசறையோடு சேர்ந்து சேவை செய்ய வருமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், காவல் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், சுகாதாரத் துறை பணியாளர்கள், அதிகாரிகள் மருத்துவர்கள், செவிலியர்கள் முதலிய சேவகர்களுக்கு என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார். மேலும், ஊர் கூடி இழுத்தால் தான் தேர் நகரும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து சேவை செய்தால்தான் கரோனா ஒழியும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "கரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அறை"- 24மணி நேர சேவை