காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு லைட் ஹவுஸ் குப்பத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் பொது மக்களின் பல்வேறு பிரச்னைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தார். மீனவர்கள் நிரந்தரமாக முகத்துவாரத்தை தூர்வார கோரிக்கை வைத்தனர். இருபது ஆண்டு காலமாக ஆண்டுக்கு ஒருமுறை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
பழவேற்காடு கடற்கரை பகுதியில் அதானி துறைமுகம் அமைக்கப்பட்டால் 50 ஆயிரம் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர். மேலும், குடிநீர், கழிப்பறை, மழை நீர் சேகரிப்பு, மின்சார தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து கமல்ஹாசனிடம் தெரிவிக்கப்பட்டது.
கிராம சபைக் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கமல், ‘பழவேற்காடு பகுதியில் மக்களுக்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாதம் ஒருமுறை முகாம் அமைக்கப்படும். அரசு மக்கள் சம்பந்தப்பட்டது. துறைமுகத்தை விரிவுபடுத்தினால் சென்னை உள்ளிட்ட ஒரு கோடி மக்களுக்கும் மேல் பாதிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.
மேலும், “மதக்கொள்கை அரசு கொள்கையாக எடுத்துக்கொள்ளக்கூடாது, அரசியலை வியாபாரமாக செய்து பிழைக்கலாம் என்று நினைப்பவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு உதாரணமாக அமெரிக்கா இருக்கிறது. தேர்தலில் நடக்கும் ஊழல்களை தாங்க முடியாமல் பின் வாங்கினோம். ஜெயிலில் போடுவார்கள் என்று பயந்து தவறு செய்ய மாட்டார்கள். தேர்தலில் பணம் விளையாடுகிறது. 15 கோடி ரூபாயை பார்க்கவில்லை. நாங்கள் ஏழரை கோடி மக்களை பார்த்தோம்” என்றும் கூறினார்.
இதையும் படிங்க: இன்ஜினியர்களுக்கு தித்திக்கும் செய்தி! - இஸ்ரோவில் வேலை