வேலூர்: காட்பாடியை அடுத்த சேர்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அரசு, தனியார், அரசு உதவிப்பெறும் கலை அறிவியல் கல்லூரிகள் என 79 உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இப்பல்கலைக்கழகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த முதல் பருவத் தேர்வு முடிவுகளில் சுமார் 3,200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பூஜ்ஜியம் அளவில் மதிப்பெண் அளிக்கப்பட்டிருப்பதாகவும், தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் மாணவர்களும், பேராசிரியர்களும் குற்றம்சாட்டியிருந்தனர்.
இதுதொடர்பாக, வேலூரில் உள்ள ஊரிசு கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சேர்க்காட்டிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கோடிங் சீட்டில் விடுபட்ட 16,000 மாணவர்களின் மதிப்பெண்கள் மறுபதிவு செய்யப்பட்டு சரிசெய்யப்பட்டிருப்பதாகவும், இக்குளறுபடிகளுக்கு காரணமான சம்மந்தப்பட்ட கல்லூரி பேராசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருப்பதாகவும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சந்திரன் கூறியதாவது, "திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட உறுப்புக் கல்லூரிகளில் இருந்து முதல் பருவத்தேர்வை (செமஸ்டர்) சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். செமஸ்டர் தேர்வைப் பொறுத்தவரை 75 சதவீத மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் வழங்கப்படுகிறது.
இந்த விடைத்தாள்கள் தலா இரு பேராசிரியர்கள் மூலம் தனித்தனியாக திருத்தப்பட்டு அதிகபட்ச மதிப்பெண்கள் அளிக்கப்படும். மீதமுள்ள 25 சதவீத மதிப்பெண்கள் அக மதிப்பீட்டுத் தேர்வு, வருகைப் பதிவு அடிப்படையில் அந்தந்தக் கல்லூரி நிர்வாகங்களே வழங்குவதாகும். செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன் அதன் வரைவு மதிப்பெண் பட்டியல் அனைத்து கல்லூரிகளுக்கு அனுப்புவது வழக்கம்.
அதன்படி, தற்போது முதல் பருவத்தேர்வுக்கான வரைவு மதிப்பெண் பட்டியல் ஒவ்வொரு கல்லூரிக்கும் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவற்றில் அக மதிப்பீட்டு மதிப்பெண்கள், வருகைப் பதிவு விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து அதனை கல்லூரி நிர்வாகங்கள் கணினி கோடிங் சீட்டில் முறையாக பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு கோடிங் சீட்டில் விதிமுறைகளை சரியாக பின்பற்றாமலும், அஜாக்கிரதையாகவும் மதிப்பெண்களை பதிவு செய்திருந்தால் குளறுபடிகள் ஏற்படும்.
அந்தவகையில், கல்லூரி நிர்வாகங்கள் அறிவுறுத்தியதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 16,000 மாணவர்களுக்கு கோடிங் சீட்டில் மதிப்பெண்களை முறையாக பதிவு செய்யாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு,அந்த மதிப்பெண்கள் மறுபதிவு செய்யப்பட்டு சரிசெய்யப்பட்டன. மேலும், இந்த குளறுபடிகளுக்கு காரணமான வகையில் மாணவர்களின் மதிப்பெண்களை கோடிங் சீட்டில் சரிவர பதிவு செய்யாத சம்பந்தப்பட்ட கல்லூரி பேராசிரியர்களுக்கு விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து, விடைத்தாளில் மதிப்பெண் குளறுபடி நிகழ்ந்திருப்பதாக எண்ணினால், அதற்கு சம்பந்தப்பட்ட மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்குத்தான் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு மறுமதிப்பீட்டுக்காக விண்ணப்பிக்கப்படும் விடைத்தாள்களை ஏற்கனவே திருத்திய இரு பேராசிரியர்களைக் கொண்டு அல்லாமல் மூன்றாவதாக ஒரு பேராசிரியரைக் கொண்டு திருத்தப்படும்.
அப்போது, மூன்றாவதாக திருத்திய பேராசிரியர் அளித்த மதிப்பெண்களை ஏற்கனவே திருத்திய இரு பேராசிரியர்களின் மதிப்பெண்களுடன் ஒப்பிட்டு ஒன்று முதல் 10 மதிப்பெண்களுக்குள் மாறுபாடு இருந்தால் அதன் சராசரி மதிப்பெண் கணக்கிட்டு வழங்கப்படும். மாறாக, மற்ற இரு பேராசியர்கள் அளித்த மதிப்பெண்களை விட ஏதேனும் ஒரு பேராசிரியர் அளித்த மதிப்பெண் 1 முதல் 10 மதிப்பெண்களுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ இருப்பது கண்டறியப்பட்டால் அவர் அடுத்த இரு செமஸ்டர் தேர்வு விடைத்தாள்கள் திருத்துவதிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவார்” என்றார்.
இதையும் படிங்க: ரூ.4,262 கோடி மதிப்பிலான 4,578 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு - அமைச்சர் சேகர்பாபு