திருவள்ளூர்: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், திரைப்பட நடிகையுமான குஷ்பு, அண்மையில் தனது X வலைத்தளப் பக்கத்தில் சேரி மொழி என குறிப்பிட்டிருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குஷ்புவின் அந்த பதிவிற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தரப்பில் நடிகை குஷ்பு தனது X தளப் பதிவிற்காக மன்னிப்பு கோர வேண்டும் என அறிவித்திருந்த நிலையில், அவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், நடிகை குஷ்பு சேரி மக்களை இழிவாகப் பேசியதாக, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் முன்னேற்றப் படை சார்பில், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகி ஜான்சாமுவேல் உள்ளிட்ட பலர், திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் பா.சிபாஸ் கல்யாணிடம் புகார் மனு அளித்தனர்.
அப்போது, தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமியும் உடன் இருந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “இந்த விவகாரத்தில் ஏற்கனவே மற்ற அமைப்பினர் புகார் அளித்ததால், குஷ்பு மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமையின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், எங்கள் சார்பில் அளித்த மனுவின் அடிப்படையில், சைபர் கிரைம் பிரிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பையிலிருந்து திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி தமிழகத்திற்கு வந்துவிட்டு, தமிழ் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ் மக்களையும் இழிவாகப் பேசியதற்கு, நடிகை குஷ்பு
தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து பேசியதற்கு கொந்தளித்த குஷ்பு, தமிழக மக்கள் மீதும், குறிப்பாக தமிழகப் பெண்கள் மீது அக்கறை இருந்திருந்தால், இப்படி இழிவாகப் பேசி இருக்க மாட்டார். இனி வரும் காலங்கலில் நடிகை குஷ்பு நாவடக்கத்தோடு பேசவில்லை என்றால், கடும் கண்டனம் தெரிவிக்கப்படும்" என்று பேசினார்.
மேலும், விஜயலட்சுமி விவகாரத்தில் தான் உடன் இருந்ததால்தான், தமிழக மக்கள் ஆதரவு அளித்ததாகத் தெரிவித்த வீரலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரின் பொது வாழ்க்கை தன்னால்தான் முடிவடையப் போவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: கும்பகோணம் விஸ்வநாதர் கோயில் தனிநபர் பட்டா ரத்து செய்ய உத்தரவு - வழக்கறிஞர் ஆர்.பிரகாஷ் தகவல்!