திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே உள்ள புதுமாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) தன் குடும்பத்தினருடன் திருவண்ணாமலை மாவட்டம் படைவீட்டில் உள்ள தனது குல தெய்வ கோவிலுக்குச் சாமி கும்பிட சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி அளவில் அவரது குடிசை வீட்டில் எதிர்பாராதவிதமாக மின் கசிவு ஏற்பட்டதில் மளமளவென தீ பரவியது.
இதில், வீட்டிற்குள் இருந்த 3 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதில் வீட்டிலிருந்த பீரோ,கட்டில் சாமான்கள், துணிமணிகள், பள்ளிச் சான்றிதழ்கள், ஆதார் கார்டு, ரேஷன் அட்டை போன்றவை தீயில் கருகி நாசமாகின.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், தண்ணீரை ஊற்றி அணைக்க முற்பட்டபோது தீ அணையாத நிலையில், அவரது வீட்டின் அருகே உள்ள மற்றொரு குடிசை வீட்டில் தீ பற்றி அதிலிருந்த பொருட்களும் தீயில் கருகியது. பின்னர், இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் பேரம்பாக்கம் தீயணைப்புத்துறையினர் தகவல் அளித்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கின்றனவா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.