திருவள்ளூர் மாவட்டம் தீயம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் சரண்குமார் (20), மணிகண்டன் (19). நெருங்கிய நண்பர்களான இவர்கள் அருகில் உள்ள வெல்டிங் பட்டறையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இருவரும் நேற்று இரவு வழக்கம்போல் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று மக்களை அச்சுறுத்தும் வகையில் தங்களிடம் இருந்த கத்தியை சாலையில் உரசி தீப்பொறி பறக்கவைத்து கூச்சலிட்டபடி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக செங்குன்றம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சரண்குமார், மணிகண்டன் கைது செய்து அவர்களிடம் இருந்த பட்டாக் கத்தி மற்றும் இருசக்கர வாகனத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பேட்ட படத்தில் இடம்பெறும் மரண மாஸ் பாட்டிற்கு 'டிக் டாக்' வீடியோ எடுப்பதற்காக கத்தியை தரையில் உரசி தீப்பொறி பறக்கவிட்டபடி சென்றதாக தெரிவித்தனர்.
இதனத்தொடர்ந்து 'டிக் டாக்' வீடியோ எடுப்பதற்காக இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.