திருவள்ளூரில் உள்ள கரிக்கலவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ்(24) மற்றும் அர்ச்சனா(23). தம்பதியான இவர்கள் இருவரும் மீரா திரையரங்கிலிருந்து நேதாஜி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, திடீரென அவர்களது வாகனத்தில் புகை வரவே அதிர்ச்சி அடைந்து, உடனடியாக இருசக்கர வாகனத்தை நடுரோட்டில் நிறுத்தினர்.
பின்னர் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் தண்ணீரை வாங்கி இருசக்கர வாகனத்தின் மீது ஊற்றினர். இருப்பினும் தீ மளமளவென பற்றி இருசக்கர வாகனம் எரிந்தது. இதுகுறித்து திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

இருப்பினும் இருசக்கர வாகனம் முற்றிலும் தீக்கிரையானது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. சமீபத்தில் பேட்டரியில் இயங்க கூடிய இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்த நிகழ்வுகள் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்திய நிலையில், தற்பொழுது இருசக்கர பெட்ரோல் வாகனமும் தீப்பற்றி எரிவது இருசக்கர வாகன பாதுகாப்பு குறித்த அச்சத்தை எழுப்பி உள்ளது. தீ விபத்து குறித்து திருவள்ளூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அக்னிபாத் போராட்டம் - தமிழ்நாட்டில் ரயில்கள் திடீரென ரத்து