திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆர்கே பேட்டை அடுத்த நாராயணபுரம் பகுதிக்கு அருகிலுள்ள எர்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ்(17), சத்யா(14), விஜயகுமார் (17). இவர்கள் அம்மையார்குப்பம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் மூவரும் கூலி வேலை செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று வேலைக்கு சென்று திரும்பும்போது கிராம சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த அவர்களது மோட்டர் பைக், அருகில் புதர் மண்டிக்கிடந்த 80 அடி ஆழ பாழடைந்த கிணற்றில் விழுந்தது.
இந்த விபத்தில் சத்யா, சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விஜயகுமார் பைக்கிலிருந்து குதித்ததில் காயமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் தீயணைப்புத் துறை வீரர்கள் உதவியுடன் மீட்கப்பட்டு, உடற்கூறாய்வுக்காக திருத்தணி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக ஆர்கே பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் எஸ்.எஸ்.ஐ. பால்துரை மரணம்!