திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியை அடுத்த சாமி ரெட்டிபாளையம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக கும்முடிப்பூண்டி காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் அவர்களுக்கு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து காவல் துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் சந்தேகிக்கும்படியான இருவர், கைகளில் இரண்டு கேன்களை வைத்துக் கொண்டு சென்றுள்ளனர். காவல் துறையினரை கண்டதும் இருவரும் தப்பி ஓட முயற்சித்ததை அடுத்து, காவல் துறையினர் அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
தொடர்ந்து அவர்களை விசாரித்ததில், இருவரும் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க முயன்றதும் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 10 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மத்திய புழல் சிறையில் அடைந்தனர்.