திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய டயர்களை, ஆயிலாக மாற்றும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்நிலையில் இன்று (ஜூலை 11) தொழிற்சாலையில் அதிகபட்ச வெப்பநிலையில் பாய்லர் கொதிக்கும்போது, மூடி திறக்கப்பட்டதால் பாய்லர் வெடித்துள்ளது.
இதில் இரண்டு வட மாநிலத்தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மூவர் கவலைக்கிடமான முறையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா (35), மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த குந்தன்(21) ஆகியோரே உயிரிழந்தது எனத் தெரியவந்தது.
மேலும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விதுன்யா (21), விதூர் (18), சாய்(18) ஆகியோரே படுகாயமடைந்ததும் தெரிய வந்தது.
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணிபுரிந்ததே விபத்திற்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் கட்டட தொழிலாளி பெண் உயிரிழப்பு