திருவள்ளூர் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை அருகே தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தில் ஆண்டுதோறும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம் போக்குவரத்து தடைபடும்.
இதனால் மக்கள் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் வழியாக 20 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் ஊத்துக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 5 ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதியில் ரூபாய் 30 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது.
ஆனால், இன்று வரையில் பணி முடிந்தபாடில்லை. அண்மையில் நிவர் புயலால் தரைப்பாலம் சேதமடைந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதைத்தொடர்ந்து, கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தில், பொதுமக்கள் ஆபத்தான முறையில் கடந்துசெல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இதனிடையே, தரைப்பாலம் தற்காலிமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்துத் தொடங்கிய நிலையில், கடந்த வாரம் மூன்று நாள் பெய்த தொடர் மழையால் மீண்டும் தரைப்பாலம் சேதம் அடைந்தது.
சீரமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவேறாத நிலையில், மேம்பாலத்தில் மக்கள் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். மேம்பாலம் அருகே உயர் அழுத்த மின்கம்பி செல்கிறது.
சீத்தஞ்சேரியைச் சேர்ந்த சரண் (16) என்ற இளைஞர் மேம்பாலத்தைக் கடக்கும்போது செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவர் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், ஒதப்பையிலிருந்து ஊத்துக்கோட்டையில் உள்ள வங்கியில் பணம் எடுப்பதற்காக ஸ்ரீதர் (24) என்ற இளைஞர் மேம்பாலத்தை கடந்தபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரும் ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதுபோன்ற விபத்துகளுக்கு மேம்பாலப் பணி பாதியில் நிறுத்தப்பட்டதே காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சம்பவங்களுக்காக மேம்பால ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், விரைவில் மேம்பாலப் பணியை முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.