தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக் காரணமாக, கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால், திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள ஆந்திர மாநில டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்னைக்கு கடத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம்–திருவாலங்காடு கூட்டுச்சாலையில் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையில் காவதுறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இருவர் இரு சக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்து கொண்டிருந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது, மூட்டையை பிரித்து பார்த்த போது, 400 மதுபாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், வாகனத்திலிருந்து, வந்தவர்கள் சென்னை கோடம்பாக்கம் சேர்ந்த விஜயரங்கன் (34), வடபழனி சேர்ந்த கிஷோர்குமார் (34) என தெரிய வந்தது. மதுபாட்டில்கள் கடத்தி சென்று, ஒரு குவார்டர் பாட்டில், 500 ரூபாய்க்கு விற்பனை செய்வதும் ஒப்புக் கொண்டனர். இவர்களிடமிருந்து 400 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.