திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய பொம்மாஜிகுளம் பகுதியில் வசிப்பவர் ராஜசேகர்(30). கூலித் தொழிலாளியான இவர் பொதுமுடக்கத்தால் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு அவரும், அவரது தந்தை மஸ்தானும் (51) வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள், ராஜசேகரின் வீட்டிற்குள் புகுந்து இரண்டரை சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி மற்றும் 20ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். காலையில் எழுந்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜசேகர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
அதே பகுதியில் வசிக்கும் விக்கிரமாதித்தன் என்பவரது இருசக்கர வாகனமும் திருடிச் சென்றது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாதிரிவேடு காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடையங்களை சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், நகையை கொள்ளையடித்த நபர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெரியார் சிலை அவமதிப்பு - ராகுல் காந்தி தமிழில் ட்வீட்